Friday, April 1, 2011

அப்பாவின் அன்பு

 

அப்பாவின் அன்பு

 எப்படி எப்படி  எல்லாமோ
தன்
பாசம்
உணர்த்துவாள் அம்மா
ஒரேயொரு கைஅழுத்தத்தில்
எல்லாமே உணர்த்துவார்  அப்பா...

முன்னால் சொன்னதில்லை
பிறர் சொல்லித்தான்  கேட்டிருக்கிறேன்
என்னைப் பற்றி பெருமையாக
அப்பா பேசிக்கொண்டிருந்ததை...
அம்மா எத்தனையோ முறை திட்டினாலும்
உறைத்ததில்லை
உடனே உறைத்திருக்கிறது
என்றேனும் அப்பா முகம் வாடும் போது
உன் அப்பா எவ்வளவு உற்சாகமாக
இருக்கிறார் தெரியுமா
என என் நண்பர்கள்
என்னிடமே சொல்லும்
போதுதான் எனக்குத் தெரிந்தது
எத்தனை பேருக்குக் கிடைக்காத தந்தை
எனக்கு மட்டும் என...
கேட்ட உடனே கொடுப்பதற்கு
முடியாததால் தான்
அப்பாவை அனுப்பி

இருக்கிறாரோ கடவுள்..?

சிறுவயதில் என் கைப்பிடித்து
நடைபயில சொல்லிக்கொடுத்த அப்பா
என் கரம் பிடித்து நடந்த போது
என்ன நினைத்திருப்பார்..?
லேசாக என் கால் தடுமாறினாலும்
பதறும் அப்பா இன்று நான்
தடுமாறிய போது  பதறாமல் இருக்கிறார்
மீளா துயிலில்... 
அம்மா செல்லமா அப்பா செல்லமா
என கேட்டபோதெல்லாம்
பெருமையாகச் சொல்லி  இருக்கிறேன்
அம்மா செல்லமான 
அப்பா செல்லம் என இன்று
அப்பா சென்ற பின்னர்
நான் யார் செல்லம்..?
எத்தனையோ பேர்
நான் இருக்கிறேன்
எனச் சொன்னாலும்
அப்பாவை போல்
யார் இருக்க முடியும்..?
 சொல்லிக்கொடுத்ததில்லை
திட்டியதும் இல்லை
இல்லை என்றும்
சொன்னதுமில்லை 
 வேண்டாம் எனக்
கூறியதும் இல்லை
இருந்தும் ஏதோ ஒன்றினால்
கட்டுப்படுத்தியது
அப்பாவின் அன்பு
நானும் காட்டியதில்லை  அவரும் காட்டியதில்லை
எங்கள் பாசத்தை...
இருந்தும் காட்டிக் கொடுத்த கண்ணீரைத்
துடைக்க இன்று அப்பாவும் இல்லை..
 அம்மாவிடம் பாசத்தையும்
அப்பாவிடம் நேசத்தையும்
இன்றே உணர்த்துங்கள்
சில நாளைகள் இல்லாமலும் போகலாம்...



2 comments:

பிரபாகர் said...

நெகிழ்வா இருக்குங்க... நிறைய எழுதுங்க...

வேர்ட் வெரிபிகேசன எடுத்து விட்டுடுங்க...

பிரபாகர்...

Prabakaran said...

Thank you